வன்முறை அதிகம் நிகழும் நாடுகள் பட்டியலில் சிறிலங்காவுக்கு முதலிடம்

புதன், 4 பிப்ரவரி 2009 (11:54 IST)
சர்வதேச அளவில் பொதுமக்களுக்கு எதிராக அதிகளவில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலை பெல்ஜியம் தலைநகர் புருசேல்ஸில் உள்ள உலக வன்முறைகள் கண்காணிப்பு மையம் நேற்று வெளியிட்டது. இதில் சிறிலங்கா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இதுதொடர்பாக உலக வன்முறைகள் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிலங்காவின் வடபகுதியில் அந்நாட்டுப் படையினர் மேற்கொண்டுள்ள ராணுவ தாக்குதலில் பல அப்பாவிப் பொதுமக்கள் தினமும் கொல்லப்படுவதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்ட அல்லது காயமடைந்த பொதுமக்களுக்கு உதவக்கூடிய பொது உதவி நிறுவனங்களுக்கும், ராணுவ தாக்குதல்கள் சேதம் விளைவித்து வருகின்றன.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதல்களில் வெற்றியடைந்து வருவதாக சிறிலங்க அரசு கூறி வரும் போதிலும், ஏராளமான பொதுமக்கள் கடந்த ஜனவரி மாதத்தில் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய நிலைமை அதைவிட மோசமடைந்துள்ளது.

உலகில் தற்போது நடைபெற்று வரும் மிக மோசமான போர் தாக்குதல்களில் மிக அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்படும் இடமாக சிறிலங்காவின் வடபகுதி காணப்படுகிறது. அந்த வகையில் இப்பட்டியலில் சிறிலங்கா முதலிடம் பிடித்துள்ளது.

இதேபோல் இஸ்ரேலியப் படையினரின் தாக்குதலால் பாதிப்படைந்த பாலஸ்தீனத்தின் காஸா பகுதி, அரசுக்கு எதிரான மக்கள் எதிர்ப்புகள் தீவிரமடைந்துள்ள மெடகாஸ்கர், அரசு படைகளுக்கு எதிராகப் போர் புரியும் மாலி நாட்டின் ரோறக் போராளிகளின் போர்ப் பகுதி போன்றவையும் உலகில் வன்முறை அதிக நிகழும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்