முல்லைத்தீவில் மோதல்: கடற்படையின் 2 அதிவேகப் படகுகள் அழிப்பு
சனி, 31 ஜனவரி 2009 (15:30 IST)
முல்லைத்தீவில் சிறிலங்கக் கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில், கடற்படையின் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு கடற்பரப்பில் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில், சிறிலங்கக் கடற்படையினரின் 15 அதிவேகத் தாக்குதல் கமோண்டோப் படகுகள், அதிவேகத் தாக்குதல் பீரங்கிப் படகுகள் ஆகியவை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களின் மீது விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் தாக்குதல் படகு அணி தாக்குதல் நடத்தியதாக புலிகள் ஆதரவு இணையத் தளமான புதினம் தெரிவிக்கிறது.
இந்தக் கடல் வழிமறிப்புத் தாக்குதலில் கடற்படையினரின் 2 அதிவேகத் தாக்குதல் கமாண்டோ படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும், இரண்டு தரப்பிற்கும் இடையில் நடந்த கடும் மோதலில் எந்தவித இழப்புக்களும் இன்றி கடற்புலிகள் அணி தளத்திற்குத் திரும்பியுள்ளதாகவும் புதினம் தெரிவிக்கிறது.
இது குறித்து சிறிலங்கப் பாதுகாப்பு அமைச்சக தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், சுண்டிக்குளம் கடற்பரப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3:00 மணியளவில் சிறிலங்கா கடற்படையினருடனான இன்னொரு மோதலில் இரண்டு கடற்கரும்புலிகள் பலியாகினர்.
இந்தச் செய்தியை சிறிலங்கப் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.