கனடாவுடன் விரைவில் அணு சக்தி ஒப்பந்தம்: இந்தியத் தூதர்
செவ்வாய், 27 ஜனவரி 2009 (18:57 IST)
கனடா-இந்தியா இடையே அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான வரைவை இந்தியா பரிசீலித்து வருவதால், அந்நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படலாம் என கனடாவுக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.
கனடா தலைநகர் ஒட்டாவாவில் செயல்படும் இந்தியத் தூதரகத்தில் நேற்று நடந்த குடியரசு தின விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியத் தூதர் எஸ்.எம்.காவே, இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளவதற்காக கனடா அளித்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்ப வியாபார நிபந்தனைகள் குறித்து இறுதி முடிவு செய்வதற்கான பணிகள் நடந்து வருவதால், அந்நாட்டுடன் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படும் என்றார்.
கனடா-இந்தியா இடையே அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான வரைவு இருதரப்பிற்கு நியாயமானதாக, பாரபட்சமின்றி இருக்கிறதா என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவுக்கு தேவையான பில்லியன் டாலர் மதிப்புடைய அணு உலைகளை நிர்மாணித்துத் தரவும், அந்த உலைகளுக்கு தேவையான அணு எரிபொருளை கூட்டாக வழங்கவும், கனடா அரசுக்கு சொந்தமான அணுசக்தி கழகம், கமிகோ நிறுவனம் மற்றும் எஸ்.என்.சி-லவலின் ஆகியவை தயாராக உள்ளன என்று எஸ்.எம்.காவே கூறினார்.