பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
தேரா இஸ்மாயில் கான் நகரின் டவுன் ஹால் பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்ட ஆட்டோவில் குண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டு வெடித்த போது அப்பகுதி வழியாகச் சென்ற கார் தூக்கி வீசப்பட்டதாகவும், குண்டுவெடிப்பு காரணமாக ஏற்பட்ட சப்தம் பல கி.மீ தொலைவிற்கு கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன், அப்பகுதி வழியாக உள்ளூர் தலைவர் கலிஃபா அப்துல் குய்யாம் சென்றுள்ளார் என்பதால், அவரைக் குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுவரை 6 சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு பொது இடத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.