இந்தியாவுக்கு அமெரிக்காவை விட சிறந்த நட்பு நாடு ஏதுமில்லை: ஒபாமா
திங்கள், 26 ஜனவரி 2009 (15:58 IST)
இந்தியாவின் 60வது குடியரசு தினத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா, அமெரிக்கர்களைவிடச் சிறந்த நண்பர்களும் உறவுகளும் இந்தியர்களுக்குக் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நட்பு இயற்கையானது. வலுவான உறவுகள் மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் பகிர்ந்து கொண்ட சித்தாந்தங்களும் கோட்பாடுகளும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வலிமையை இருநாடுகளுக்கும் தந்திருக்கின்றன.
நாட்டின் 60வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கு, அமெரிக்கர்களின் சார்பில் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது விஞ்ஞானிகள் சுற்றுச்சூழல் இடர்பாடுகளுக்கு தீர்வு காண்கின்றனர்; நமது மருத்துவர்கள் புதிய மருந்துகளை கண்டறிகின்றனர்; நமது கட்டுமான வல்லுனர்கள் சமூகத்தை மேம்படுத்துகின்றனர்; நமது நாட்டு தொழில்முனைவோர் சுபிட்சத்தை ஏற்படுத்துகின்றனர்; நமது கல்வியாளர்கள் எதிர்காலக் கல்விக்கு அடித்தளமிடுகின்றனர். அந்த வகையில், இந்திய-அமெரிக்க உறவுகள் வலுப்படுவதன் காரணமாக ஒட்டுமொத்த உலக சமுதாயமும் பயன்பெறுகிறது என ஒபாமா பெருமிதம் தெரிவித்துள்ளார்.