முல்லைத்தீவில் படையினர் பீரங்கித் தாக்குதல்: 22 பேர் பலி

திங்கள், 26 ஜனவரி 2009 (13:18 IST)
இலங்கையின் முல்லைத்தீவில் மக்கள் பாதுகாப்பு வலயம் என சிறிலங்க அரசு அறிவித்த பகுதியின் மீது படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 22 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவுப் பகுதியில் சிறிலங்க படையினருக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக 35 கி.மீ சதுரப் பரப்புள்ள இடத்தை அந்நாட்டு அரசு மக்கள் காப்பு வலயமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் பகுதிக்குள் வன்னி மக்களை திரளச் செய்த சிறிலங்க அரசு அப்பகுதியின் மீது தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டு பெரும் இனப் படுகொலையை நடத்தத் துவங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களைப் பெறுவதற்காகக் காத்திருந்த பொதுமக்களை குறிவைத்து நேற்று (ஞாயிறு) சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேபோல், உடையார்கட்டு மற்றும் தேராவில் பகுதிகளில் ஏற்கெனவே இடம்பெயர்ந்து வீதியோரங்களில் தங்கியிருந்த பொதுமக்களை இலக்கு வைத்து நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறிலங்கப் படையினர் நடத்திய இந்த 2 தாக்குதல்களிலும் 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக புதினம் இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்