இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதன் காரணமாக பலத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.45 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. மலுகு மாகாணத்தின் சௌம்லகி நகருக்கு வடகிழக்கே 185 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கடியில் 146 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாக சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இன்று காலை 8.18 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது. இது பூமிக்கடியில் 46.7 கி.மீ ஆழத்தில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.