இலங்கை போரை நிறுத்த வேண்டும்: ஒபாமாவுக்கு அமெரிக்கத் தமிழர்கள் கோரிக்கை

புதன், 21 ஜனவரி 2009 (11:54 IST)
இலங்கையில் நடைபெற்று வரும் போரை அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஹுசைன் ஒபாமாவின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வருவதுடன், தமிழீழம் உருவாகுவதற்கு வழியையும் ஏற்படுத்த வேண்டும் என அமெரிக்க வாழ் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஒபாமா ஆட்சிப் பொறுப்பை எடுக்கும் நாளில் ‘ஒபாமாவுக்கான தமிழர்கள’ அமைப்பு அவருக்கு வாழ்த்துக் கூறி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடந்து வரும் போரை அமெரிக்காவின் புதிய அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்து தமிழீழம் உருவாகுவதற்கு வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இந்த புதிய அரசு ஆட்சி அமைத்ததும், தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமெரிக்கா இதுவரை கடைப்பிடித்த கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்துவதற்கு அழுத்தமான நடவடிக்கைகளை அமெரிக்கா உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகள் மாற்றமடைய வேண்டும் எனவும், ஒபாமா அதனைச் செய்வார் எனவும் அனைத்துலக தமிழ் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிப்பதாக விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளமான புதினம் தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்