சுற்றுலாவை மேம்படுத்த விசா கட்டணத்தை ரத்து செய்தது தாய்லாந்து
செவ்வாய், 20 ஜனவரி 2009 (18:21 IST)
சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டணத்தை தாய்லாந்து அரசு அடுத்த 3 மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது.
தாய்லாந்து அமைச்சரவையின் வாராந்திரக் கூட்டம் இன்று நடந்தது. அதில் கடந்தாண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை பாதிப்படைந்துள்ளதாகவும், அதனை பழைய நிலைக்கு மேம்படுத்த அடுத்த 3 மாதங்களுக்கு அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் அந்நாட்டு தேசிய பூங்காக்களுக்கான நுழைவுக் கட்டணம், வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் உள்ளிட்டவையும் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாய்லாந்து பிரதமர் அபிஷித் வெஜ்ஜஜிவா, அரசின் இந்த நடவடிக்கைகளால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.