அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் பராக் ஒபாமா

அமெரிக்காவின் 44வது அதிபராக பராக் ஹுசைன் ஒபாமா இன்று பதவியேற்கிறார். இந்திய நேரப்படி இன்றிரவு 9.30 மணியளவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியைக் காண 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தலைநகர் வாஷிங்டனில் குவிந்துள்ளனர்.

ஆப்ரிக்க-அமெரிக்க இனத்தவரான பராக் ஒபாமா (47) இன்றிரவு 10 மணியளவில் பொறுப்பேற்கிறார். அந்நாட்டின் தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட்ஸ் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அந்நாட்டின் துணை அதிபராக ஜோ பிடென் பொறுப்பேற்றுக் கொள்வார்.

இதற்கிடையில் பதவியேற்பு விழாவுக்கு செல்வதற்கு முன்பாக அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்திக்கும் ஒபாமா அவருடன் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார்.

வாஷிங்டனின் கேபிடல் ஹில் பகுதியில் இன்றிரவு இந்திய நேரப்படி 9.30 மணியளவில் நடைபெறும் இந்த சரித்திரப் புகழ்பெற்ற பதவியேற்பு விழாவைக் காண 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தலைநகரில் குவிந்துள்ளனர்.

கென்யாவில் கொண்டாட்டம்: கருப்பர் இனத்தவரான ஒபாமாவின் பூர்வீகம் கென்யாவில் உள்ள கொகிலோ (Kogelo) கிராமம். இன்று ஒபாமா பதவியேற்பதை முன்னிட்டு அந்த கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதுமட்டுமின்றி உலகம் முழுவதும் ஒபாமாவின் பதவியேற்பை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி உள்ளனர். இதில் ஜப்பானில் மட்டும் ஒபாமா உருவத்தைப் போன்ற முகமூடிகள் ஆயிரக்கணக்கில் விற்றுத் தீர்ந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்