மும்பை தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை - பாக். ஒப்புதல்
வெள்ளி, 16 ஜனவரி 2009 (19:48 IST)
மும்பையில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி பயங்கரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் முதல்முறையாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜமாத் உத் தவா அமைப்பிற்குத் தொடர்பிருப்பதாகவும், அந்த அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இந்திய விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவு செயலர் சல்மான் பஷீர், இந்திய தூதர் சத்யபிரதா பால்-யிடம் கூறியுள்ளார்.
மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ராஜ்யரீதியில் இந்தியாவிடம் தெரிவிக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்த மறுதினமே பாகிஸ்தான் பதில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத்தில் அயலுறவு அமைச்சக அலுவலகத்தில் இந்தியத் தூதருடன் நடத்திய சந்திப்பின்போது, மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் விசாரணை, ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டுள்ள ஜமாத் உத் தவா அமைப்பிற்கு எதிரான தடையை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களை பாக். செயலர் எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாடுகளிடம் இருந்து விடப்பட்ட கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பதாகவும் சல்மான் பஷீர் கூறினார்.
என்றாலும் எந்த மாதிரியான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுத்து வருகிறது என்பதை அவர் வெளியிடவில்லை.