இந்திய மென்பொருள் வல்லுனர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
வியாழன், 15 ஜனவரி 2009 (12:38 IST)
அமெரிக்காவில் செயல்படும் சத்யம் கிளை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இந்திய மென்பொருள் வல்லுனர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் லக்ஷ்மண மூர்த்தி. இவரது மகன் அக்-ஷய் விஷால்(26). அமெரிக்காவின் அலாஸ்கா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம் பெற்ற இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்த அடிப்படையில் அமெரிக்காவுக்கு சென்றார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று அர்கன்சாஸ் மாகாணத்தின் லிட்டில் ராக் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் கிளம்பும் போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் விஷால் சரமாரியாக சுடப்பட்டதாக அமெரிக்காவில் உள்ள அவரது நண்பர்கள், ஹைதராபாத்தில் உள்ள விஷாலின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த விஷால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பாகவே உயிரிழந்து விட்டார். இக்கொலைக்கான காரணம் குறித்து அமெரிக்க காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.