மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் அரசிற்கு தொடர்பில்லை

செவ்வாய், 13 ஜனவரி 2009 (17:11 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ அமைப்புகளின் தொடர்பிருக்கிறது என்ற இந்திய அரசின் கருத்தை பிரிட்டன் மறுத்துள்ளது.

ஆனால், அந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசிற்கு முதன்மையான - அடிப்படையான பொறுப்பு உள்ளது. அதாவது லஸ்கர்-ஈ- தோய்பாவின் வேர்களை அழிக்க பாகிஸ்தான் அரசிற்கு அடிப்படை பொறுப்பு உள்ளது என்று பிரிட்டன் அயலுறவு அமைச்சர் மிலிபேண்ட் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி வந்துள்ள மிலிபேண்ட், இன்று இந்திய அயலுறவு அமைச்சர் பிராணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேசிய பின் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

முன்னதாக பிரிட்டன் அயலுறவு அமைச்சருடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்ட பிரணாப் முகர்ஜி மும்பை தாக்குதல்கள் பற்றிய விவரங்களையும் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் விரிவாக விளக்கிக் கூறியதாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பை தாக்குதல்களில் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ அமைப்புகளின் கை இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை பிரிட்டன் அயலுறவு அமைச்சர் மிலிபான்ட் மறுத்துள்ளார். இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் அரசு வழிநடத்தியுள்ளதாக கூறுவதற்கு இடமில்லை, ஆனால் லஸ்கர்-ஈ- தோய்பா மீதான பாகிஸ்தானின் அணுகுமுறை எவ்வாறு இருக்கிறது என்பது முக்கியமாக கவனிக்கபடவேண்டிய ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்