காஸா தாக்குதலை உடனடியாக நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபையில் தீர்மானம்

வெள்ளி, 9 ஜனவரி 2009 (13:55 IST)
காஸா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலை உடனடியாக நிறுத்துவதுடன், அப்பகுதியில் இருந்து படைகளை இஸ்ரேல் திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான இங்கிலாந்து கொண்டு வந்த இத்தீர்மானத்தின் மீது இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில், 14 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா மட்டும் கலந்து கொள்ளவில்லை.

உடனடியான, நம்பத்தகுந்த வகையிலான போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அமல்படுத்துவதுடன், காஸாவில் குவித்துள்ள ராணுவப் படைகளை இஸ்ரேல் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவு, எரிபொருள், மருத்துவ உதவி உள்ளிட்ட மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை தடையற்ற முறையில் வழங்க அப்பகுதி நாடுகள் உதவிட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு எதிரான வன்முறை, சண்டை ஆகியவை பயங்கரவாதமாகவே கருதப்படும் என்றும் அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்திற்கு உட்பட்ட காஸா மீது கடந்த 14 நாட்களாக இஸ்ரேல் ராணுவ நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 750ஐ தாண்டியுள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்