மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியா நடத்தி வரும் புலனாய்வுக்கு கூடுதல் ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக, இத்தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் விசாரணை நடத்த மாட்டோம் என அமெரிக்க புலனாய்வு அமைப்பு (எஃப்.பி.ஐ.) தெரிவித்துள்ளது.
அமெரிக்க விதிமுறைகளின்படி, எந்த நாட்டில் அமெரிக்கர்கள் கொல்லப்பட்டாலும் அந்த சம்பவம் குறித்து புலனாய்வு நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அதற்குக் காரணமானவர்களை அமெரிக்க சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பணியை அமெரிக்க புலனாய்வு அமைப்பு மேற்கொள்ள வேண்டும்.
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதால், அதனை நடத்திய பயங்கரவாதிகளிடம் எஃப்.பி.ஐ. விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியா கைது செய்துள்ள குற்றவாளிகளிடம் அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தாது என அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதல் தொடர்பாக புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்யாமல், இந்தியா நடத்தும் புலனாய்வுக்கு உதவுவது என்ற முடிவுக்கு எஃப்.பி.ஐ வந்துள்ளது.