சிறிலங்க இராணுவத்தின் வரலாறு வன்னியில் மாற்றி எழுதப்படும்
புதன், 7 ஜனவரி 2009 (21:13 IST)
அரசியல் ஆதாயத்திற்காகத் தூண்டப்பட்டுள்ள சிறிலங்க இராணுவப்படை ஜனவரி 2ஆம் தேதி கிளிநொச்சி நகரத்தை ஆக்கிரமித்தது. சிறிலங்க ஆயுதப் படைகள் துவக்கியுள்ள 'வன்னி ஆபரேஷன்' எனப்படும் மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதிதான் இது; கடந்த 2007 பிப்ரவரியில் துவக்கப்பட்ட இந்நடவடிக்கை இன்னும் முடியாமல் 23 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இருந்தாலும், சில நாட்களுக்கு முன்பே கிளிநொச்சியைக் காலி செய்துவிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள், தங்களின் போராளிகளையும் கனரக ஆயுதங்களையும் இன்னும் வடகிழக்காக நகர்த்திவிட்டனர்.
தெற்கில் பல்வேறு நகரங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டும், இனிப்புக்கள் பறிமாறப்பட்டும், பொது இடங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டும் கிளிநொச்சி ஆக்கிரமிக்கப்பட்ட நிகழ்வு கொண்டாடப்பட்டது. முன்னதாகவே கொழும்புவில் தொலைக்காட்சிகளும் வானொலிகளும் உடனடிச் செய்திகளை வெளியிட்டன, செல்பேசிக் குறுந்தகவல்கள் கூடப் பறந்தன.
ஈழப் போரில் கிளிநொச்சி நகரம் வீழ்வது புதிதல்ல; 1996 செப்டம்பரில் சத் ஜெயா நடவடிக்கையின் மூன்றாவது கட்டத்தில் சிறிலங்க இராணுவத்தினர் இந்நகரத்தைக் கைப்பற்றினர். இருந்தாலும், ஓயாத அலைகள் -2 மூலமாக புலிகள் 1998 செப்டம்பரில் கிளிநொச்சியை மீண்டும் தங்கள் வசப்படுத்தினர்.
அப்படியானால் பிறகு எதற்கு இந்த வெடிகளும் கொண்டாட்டங்களும்....?
வடக்கு மத்திய மற்றும் மத்திய மாகாணங்களுக்கு பிப்ரவரி 14 அன்று நடக்கவிருக்கிற மாகாணக் கவுன்சில் தேர்தல்களை முன்னிட்டுத்தான் இந்தத் தேச அளவிலான கொண்டாட்டங்களும், வாண வேடிக்கைகளும். வரவிருக்கும் மாகாணக் கவுன்சில் தேர்தல்களை முன்னிட்டு அரசும் எதிர்க்கட்சிகளும் வேகமாகத் தயாராகி வருகின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைத் தங்களின் ஆயுதமாக எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ள நிலையில், அரசோ 'தமிழர்கள் மீதான போரை'த் தனது கவசமாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இன்னும் அதிகமாக, வடக்கில் நடந்து வரும் போரின் துணையுடன் தனது அரசியல் பிரச்சனைகளைச் சமாளித்துத் தெற்கில் தனது அரசியல் பிடியை உறுதியாக்கிக்கொள்ள மகிந்த அரசு முயற்சிக்கிறது. இவை எல்லாம்தான் கொண்டாட்டங்களுக்குப் பின்னால் உள்ள மர்மங்கள்.
சிங்கள இளைஞர்களின் கல்லறை
மூன்றாவது மற்றும் நான்காவது ஈழப் போரில் கிளிநொச்சியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட மோதல்களில் பல நூறு படையினரைச் சிறிலங்க இராணுவம் இழந்துள்ளது. பரந்தன் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நடந்த மோதல்களில் சிறிலங்க இராணுவத்தினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் வருமாறு:
1996 செப்டம்பர் மாதம் சிறிலங்க இராணுவத்தினர் 'சத் ஜெயா' எனப்படும் மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டனர். மூன்று கட்டங்களாக 70 நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் நடவடிக்கை, 12 கிலோ மீட்டர் முன்னேறி கிளிநொச்சி நகரத்தைக் கைப்பற்றியதுடன் நிறுத்தப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர், மேலும் பல நூறு படையினர் படுகாயமடைந்தனர்.
1998 பிப்ரவரியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாக சிறிலங்க அரசு அறிவித்தது. 41 படையினரின் சடலங்கள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன, மேலும் நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்தனர்.
1998 செப்டம்பர் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஓயாத அலைகள்-2 தாக்குதலில் செப்டம்பர் 29இல் கிளிநொச்சி நகரம் மீண்டும் புலிகளின் கைகளில் வந்தது. அப்போது அரசு வெளியிட்ட விவரங்களின்படி 975 படையினர் கொல்லப்பட்டனர், மேலும் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 674 படையினரின் சடலங்கள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில், பின்னர் சிறிலங்க நாடாளுமன்றத்தில் விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கே, ஓயாத அலைகள்-2 மோதலில் 1,500 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும், 100க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் தெரிவித்தார்.
2008 ஆகஸ்ட் முதல் 2009 ஜனவரி வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதல்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட சிறிலங்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,500க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும், பெருமளவிலான படையினரைக் காணவில்லை என்றும் சிறிலங்க அரசு அறிவித்துள்ளது.
ஓயாத அலைகள்-2 மோதலிற்குப் பிறகு, சிறிலங்க நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர் ரோனி டி மெல் (ஐ.தே.க.), சிங்கள இளைஞர்கள் தங்கள் அரசியல் தலைவர்களின் தன்னல விருப்பங்களுக்காக கிளிநொச்சி எனப்படும் கல்லறைக்குள் நுழைகிறார்கள் என்றார்.
ஏன் இது மிகப்பெரிய தோல்வி?
கடந்த 1998 கிளிநொச்சி மோதலில், ஆட்பலம் மற்றும் போர்க் கருவிகள் என சிறிலங்க இராணுவத்தினரின் எல்லா இராணுவச் சொத்துக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அழித்தார்கள். எதிரியை முற்றுமுழுதாகத் தோற்கடித்துப் பின்வாங்கச் செய்ததால் இது புலிகளின் உண்மையான வெற்றி.
ஆனால், 2008இல் என்ன நடக்கிறது? - கிளிநொச்சியில் இருந்து தங்களுடைய போராளிகள், கனரகப் போர்க் கருவிகள் என அனைத்தையும் இன்னும் வட கிழக்காகப் புலிகள் நகர்த்திய பிறகு- காலியாக உள்ள கிளிநொச்சி நகரத்தை ஆக்கிரமித்துக்கொண்ட மகிழ்ச்சியில் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. எதிரியை முற்று முழுதாகத் தோற்கடிக்கும் வரை போரில் வெற்றி என்பது இல்லை என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் கொழும்பு வெற்றியைக் கொண்டாடுகிறது.
முந்தைய போர்களில் இருந்து சிறிலங்கப் படைகளை முறியடிக்கும் தந்திரம் குறித்த நீண்ட அனுபவத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் அவர்கள் தங்களின் எதிர்கால முறியடிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்காகத் தங்களின் போர்க் கருவிகளைப் பாதுகாத்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன், கிளிநொச்சியின் வீழ்ச்சி போரின் வெற்றியல்ல என்று குறிப்பிட்டார். எனவே, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் உத்தரவுப்படி புலிகள் முன்பே கிளிநொச்சியைக் காலி செய்துவிட்டனர்.
சிறிலங்க இராணுவத்தின் வரலாறு மாறும்
தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு மிகப்பெரும் முறியடிப்புத் தாக்குதலிற்குத் தயாராகி வருகின்றனர் என்பது மட்டும் நிதர்சனம். தங்கள் தலைவர்களின் தன்னல நோக்கங்களை அறியாத சிறிலங்க இராணுவத்தினர் தொடர்ந்து முன்னேறினால் அவர்களுக்கு அழிவு நிச்சயம். அவர்களின் வரலாறு மாற்றி எழுதப்படும். அதைத்தான் அண்மைய கள நிலவரங்களும் தெரிவிக்கின்றன.