பசுபதிநாதர் கோயில் பிரச்சனை: முலாயம் சிங்கிடம் பிரச்சண்டா உறுதி

நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோயிலில் இந்திய அர்ச்சகர்கள் பூஜை நடத்த தமது மாவோயிஸ்ட் அரசு அனுமதிக்கும் என அந்நாட்டுப் பிரதமர் பிரச்சண்டா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங்கிடம் உறுதியளித்துள்ளார்.

நேபாளத்திற்குச் சென்றுள்ள முலாயம் சிங், அந்நாட்டு பிரதமர் பிரச்சண்டாவைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது இருநாட்டு உறவுகள், சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், பசுபதிநாதர் கோயிலில் இந்திய அர்ச்சகர் நீக்கப்பட்டது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதித்துள்ளனர்.

இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங், பசுபதிநாதர் கோயிலில் இந்திய அர்ச்சகர்கள் பூஜை செய்ய வேண்டும் என நேபாள உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதித்து அதனை நடைமுறைப்படுத்துவோம் என பிரச்சண்டா தம்மிடம் உறுதியளித்ததாக கூறினார்.

இந்தப் பயணத்தின் போது பசுபதிநாதர் கோயிலுக்கு செல்லவும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் தற்போது அங்கு சாதகமற்ற சூழல் நிலவுவதால் கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்பது வருத்தமான விடயம்தான் என்றும் முலாயம் சிங் கூறினார்.

நேபாளத்தின் வளர்ச்சிக்கும், நன்மைக்கும் இந்தியா அதிகளவில் உதவிபுரியும் என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டிடம் உள்ளதாகக் கூறிய அவர், இத்தகவலை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் எடுத்துச் செல்வன் என்றும் முலாயம் சிங் தெரிவித்தார்.

பசுபதிநாதர் கோயிலில் கடந்த 300 ஆண்டுகளாக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பண்டிதர்களே அர்ச்சகர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மாவோயிஸ்ட் தொண்டர்களும், கம்யூனிஸ்ட் லீக் அமைப்பின் இளைஞர் பிரிவினரும், இந்திய அர்ச்சகர்கள் இக்கோயிலில் பூஜை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மேலும், கடந்த புத்தாண்டு தினத்தன்று மாலை, தங்களால் நியமிக்கப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பூசாரியுடன் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்