இந்தியா அளித்த ஆதாரத்தை ஆய்வு செய்கிறோம்: பாகிஸ்தான்

திங்கள், 5 ஜனவரி 2009 (15:15 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத சக்திகளுக்கு தொடர்பு உள்ளதை நிரூபிக்கும் வகையில் இந்தியஅளித்த ஆதாரத்தை ஆய்வு செய்து வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அயலுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது சாதிக், மும்பை தாக்குதல் தொடர்பாக இந்திய அயலுறவு செயலர் சில தகவல்களை இன்று காலபுதுடெல்லியில் தங்கள் நாட்டுத் தூதரிடம் வழங்கியுள்ளார். அத்தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக கூறினார்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத சக்திகளுக்கு தொடர்பு உள்ளதை நிரூபிக்கும் ஆதாரத்தை அந்நாட்டிடம் இந்தியா வழங்கியுள்ளதாக, இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மும்பை தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் கஸாப் கொடுத்த வாக்குமூலம், அத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல், தாக்குதலுக்குப் பின்னர் சேகரிக்கப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவற்றை இந்தியா பாகிஸ்தானிடம் ஆதாரங்களாக அளித்துள்ளது.

எனினும், இத்தாக்குதலில் ஈடுபட்ட எந்த ஒரு பயங்கரவாதியையும் இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம். அவர்களுக்குத தங்கள் நாட்டு சட்டத்தின்படி தண்டனை வழங்கப்படும் என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்