சரப்ஜித்திற்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை குறைக்கப்படலாம்

சனி, 3 ஜனவரி 2009 (18:42 IST)
பாகிஸ்தான் அரசால் சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்படலாம் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் வெளியாகும் ‘தி நியூஸ’ நாளிதழில், சரப்ஜித்திற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி உள்துறை அமைச்சகத்திற்கு, சட்ட அமைச்சர் பரூக் நயேக் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் பிடிபட்ட காஷ்மீர் சிங்கை, கடந்தாண்டு விடுவித்த பாகிஸ்தானின் முன்னாள் மனித உரிமை அமைச்சர் அன்சர் புருனியிடமும் இக்கடிதம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக ‘தி நியூஸ’ வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புருனி, சட்ட அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தை உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டால், பாகிஸ்தானில் தூக்கு தண்டனை பெற்றுள்ள அனைவருக்கும் ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்படும். இது சரப்ஜித் சிங்கிற்கும் பொருந்தும் என்றார்.

பாகிஸ்தானின் முல்தான், பைஸ்லாபாத் ஆகிய நகரங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக குற்றம்சாட்டி சரப்ஜித் சிங்கை கைது செய்த பாகிஸ்தான் அரசு அவருக்கு மரண தண்டனை வழங்கியது.

எனினும், நிரபராதியான அவருக்கு தவறுதலாக விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளால், அவரது தண்டனை நிறைவேற்றப்படவில்லை. தற்போது அவர் கோட் லக்பத் சிறையில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்