முல்லைத்தீவில் பதுங்கியிருக்கிறார் பிரபாகரன் : சிறிலங்கத் தளபதி
சனி, 3 ஜனவரி 2009 (16:01 IST)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவில் பதுங்கியிருக்கக்கூடும் என்று சிறிலங்க இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகமாகக் கருதப்படும் கிளிநொச்சி நேற்று சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து, மகிழ்ச்சி தெரிவித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பொன்சேகா, முல்லைத்தீவும் விரைவில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் மறைவிடம் என்று கருதப்படும் பகுதிகளின் மீது சிறிலங்க விமானப்படை விமானங்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளன என்று தெரிவித்த அவர், பிரபாகரன் (வயது 54) கடற்கரை நகரமான முல்லைத்தீவில்தான் பதுங்கியிருக்க வேண்டும் என்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் 40 கி.மீ. சுற்றளவிற்குள் முடக்கப்பட்டு விட்டன என்றும் அவர் கூறினார்.
கடந்த 2006இல், தனது அலுவலகத்திற்கு அருகில் விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்து, அயல்நாட்டில் சிகிச்சை பெற்று, உயிருடன் மீண்டு வந்துள்ளவர்தான் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தரையில் இருந்து 30 அடி ஆழத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட பாதாள அறையில் பிரபாகரன் வசிப்பதாகவும், பாதுகாப்பு காரணங்களால் இரவில் மட்டுமே அவர் வெளியில் வருகிறார் என்றும் கொழும்புவில் இருந்து வெளிவரும் 'பாட்டம் லைன்' இதழ் கூறுகிறது.