மும்பை தாக்குதலில் லஷ்கருக்கு தொடர்பு: கருத்துக் கூற பாக். அமைச்சர் மறுப்பு
வெள்ளி, 2 ஜனவரி 2009 (17:43 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் தங்கள் அமைப்பிற்கு தொடர்பு உள்ளதாக பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட லஷ்கர்-ஈ-தயீபாவின் 2 முக்கிய தளபதிகள் கூறியுள்ளதாக வெளியான செய்திக்கு கருத்து தெரிவிக்க பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் மறுத்துள்ளார்.
அமெரிக்காவில் வெளியாகும் வால் ஸ்டீரீட் நாளிதழில், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பிடிபட்ட லஷ்கர் தளபதிகளான ரஹ்மான் லாக்வி, சரூர் ஷா ஆகியோரிடம் நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில், மும்பை தாக்குதலில் தங்கள் அமைப்புக் தொடர்பு இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையில், பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சிக்கு அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி பேட்டியளித்த போது இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
இதுபற்றி நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறிய குரேஷி, மும்பை தாக்குதல் குறித்து பாகிஸ்தான் சுதந்திரமான புலனாய்வை நடத்தி வருகிறது. இவ்விடயத்தில் இந்தியா அல்லது உலக நாடுகள் கூறுவதை ஏற்க வேண்டாம். உள்நாட்டு விதிமுறைகளின் படி இந்த விசாரணை நடத்தப்படும் என்றார்.