பாங்காக் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சீனா நிதியுதவி

வெள்ளி, 2 ஜனவரி 2009 (17:13 IST)
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள கேளிக்கை விடுதியில் புத்தாண்டு தினத்தன்று நடந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் டாலரை நிதியுதவியாக சீனா வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவி தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துகளை வாங்குவதற்கு தாய்லாந்து அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன அயலுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சி, தாய்லாந்து அயலுறவு அமைச்சர் காசிட் பிரோம்யாவுக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், சன்டிகா கேளிக்கை விடுதியில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

புத்தாண்டை (2009) வரவேற்கும் விதமாக பாங்காக் நகரில் உள்ள சன்டிகா கேளிக்கை விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அயல்நாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

புத்தாண்டு பிறந்த ஒரு சில நிமிடங்களில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த 243 பேருக்கு மருத்துவ உதவி அளிக்கும் வகையில் சீன அரசு தற்போது நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்