மும்பை தாக்குதலை மறந்து விடுங்கள்: பாகிஸ்தான் தேசிய ஆலோசகர்
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (18:36 IST)
இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பர நம்பிக்கையின்மையை களைவதுடன், மும்பை பயங்கரவாத தாக்குதலை மறந்து விட்டு, நட்புணர்வுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மஹ்மூத் அலி துர்ரானி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு இன்று அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்த அவர், இந்தியாவுடன் நட்பானதொரு உறவை வளர்க்கவே பாகிஸ்தான் விரும்புகிறது. அப்போதுதான் அமைதியான சூழலில் இரு நாடுகளும் வாழ முடியும். அதுதான் தெற்காசிய பகுதிக்கும் நல்லது எனக் கூறியுள்ளார்.
இதற்காக எந்த நிபந்தனையும் நாங்கள் இந்தியாவுக்கு விதிக்கவில்லை. கடந்த கால நிகழ்வுகளை மறந்து விட்டு, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.
இந்தியா-பாகிஸ்தான் உறவில் தேவையற்ற பதற்றத்தை ஊடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன. மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் 200 பேர் உயிரிழந்தனர். இது மிகவும் சோகமான நிகழ்வு, அதற்காக நாங்கள் கண்டனம் தெரிவித்தோம்.
பயங்கரவாதிகளுக்கு அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். இவ்விடயத்தில் பாகிஸ்தான் ஏற்கனவே நிறைய செய்து வருகிறது. நாட்டின் நலன் கருதி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அதிகரிப்போம். இதில் சர்வதேச நடைமுறைகள் பின்பற்றப்படும் என துர்ரானி கூறினார்.