தெற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தை தணிப்பதற்கு பாகிஸ்தான் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடரத் தயார் எனக் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் இன்று தன்னைச் சந்தித்த சீன அயலுறவுத்துறை இணை அமைச்சர் ஹீ யஃபேவிடம் இதனைத் தெரிவித்த சர்தாரி, இந்தியாவுடனான அனைத்து விவகாரங்களையும் அமைதியான முறையில் பேசித் தீர்த்துக்கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது என்றார்.
பயங்கரவாதம் என்பது மண்டலப் பிரச்னை, அதை எதிர்க்க மண்டல அளவில் கூட்டு நடவடிக்கை தேவை என்று கூறிய சர்தாரி, மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் ஒத்துழைப்பான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தியாதான் தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாற்றுகளை அடுக்கி வருகிறது என யஃபேவிடம் சர்தாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்ற சூழலை சீனா கவனமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்த யஃபே, தெற்காசியாவில் அமைதி, நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை சீனா தொடர்ந்து மேற்கொள்ளும் என அதிபர் சர்தாரியிடம் கூறியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதனைத் தணிக்கும் நடவடிக்கையாக, கடந்த ஞாயிறன்று இணை அமைச்சர் யஃபே இஸ்லாமாபாத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.