வங்கதேசத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பிரதரான ஷேக் ஹசீனா வஜேத்தின் கட்சி தலைமையிலான கூட்டணி சுமார் 75% இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது.
டாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் அசாடுஸ் ஸமன், தேர்தல் நடத்தப்பட்ட 299 தொகுகளில், 295 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 229 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதில் அவாமி லீக் மட்டும் 202 இடங்களில் வென்றுள்ளது.
இதன் மூலம் எந்த ஒரு கட்சியின் ஆதரவுமின்றி ஷேக் ஹசீனா தனித்து ஆட்சியமைக்க முடியும் என்றார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தலில் கலிதா ஜியாவிடம் ஆட்சியைப் பறிகொடுத்த ஷேக் ஹசீனா, தற்போது அந்நாட்டின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.
நேற்று நடந்த தேர்தலில் 80% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக அந்நாட்டில் நடந்து வந்த இடைக்கால ராணுவ அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கருதப்பட்டதற்கு ஏற்றவாறு, இத்தேர்தலில் ஷேக் ஹசீனா கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
மற்றொரு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி 29 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. எனினும் கலிதா ஜியாதான் போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதன் காரணமாக கலிதா ஜியா, ஷேக் ஹசீனா ஆகியோரது கூட்டணிக்கு வங்கதேச மக்கள் ஆதரவு அளிக்கமாட்டார்கள் என்று கணிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், ஷேக் ஹசீனாவில் கட்சி தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.