மும்பை தாக்குதல்: அமெரிக்கா, இங்கிலாந்து வழங்கிய ஆதாரங்களை நிராகரித்தது பாக்.
திங்கள், 29 டிசம்பர் 2008 (18:23 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்கிய ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள பாகிஸ்தான் மறுத்துள்ளது.
மும்பை மீதான தாக்குதலில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கஸாப் அளித்த ஒப்புதல் வாக்குமூலம், மொபைல்போன் உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை இங்கிலாந்தும், அமெரிக்காவும், பாகிஸ்தான் அரசிடம் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், இதுபோன்ற ஆதாரங்கள் நீதிமன்றத்தில் செல்லாது எனக் கூறிய பாகிஸ்தான், மும்பை மீதான தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பயன்படுத்திய கணினி வன்தகடுகள், மொபைல்போன்கள் உள்ளிட்டவை வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது.
பாகிஸ்தானில் செயல்படும் சக்திகளுக்கு மும்பை மீதான தாக்குதலில் தொடர்பு இருப்பதற்கு போதிய ஆதரங்கள் வழங்கியும் பாகிஸ்தான் ஏற்க மறுப்பதாக மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கையில் பாகிஸ்தான் போதுமான வகையில் ஈடுபடவில்லை என்றும் மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கருதுகின்றனர்.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் சக்திகளுக்கு தொடபு இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களில் பெரும்பாலானவை இங்கிலாந்து அதிகாரிகளால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.