இஸ்ரேலியப் போர் விமானங்கள் காஸாவில் இன்று நடத்திய வான்வழி அதிரடித் தாக்குதலில் குறைந்தது 120 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடித் தாக்குதல் காரணமாக காஸாவில் பெரும் பதற்றமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. போர் விமானங்கள் வீசிய ஏவுகணைகளில் சில, பள்ளிகள், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளைத் தாக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
காஸா காவல்துறை தலைவரும் இத்தாக்குதலில் பலியானதாகவும், 250க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸாவில் உள்ள அனைத்து பாதுகாப்பு வளாகங்களும் தகர்க்கப்பட்டு விட்டதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தது 40 இலக்குகளாக தகர்க்கப்பட்டிருக்கும் என இஸ்ரேல் ராணுவ வானொலி செய்தி தெரிவிக்கிறது.
ஹமாஸ் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதை உறுதி செய்துள்ள இஸ்ரேல் ராணுவம் அது தொடர்பான கூடுதல் தகவல் எதையும் வெளியிடவில்லை.
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் எல்லை நகரங்கள் மீது காஸா தொடர்ந்து ராக்கெட் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியது. இதற்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்த இஸ்ரேல் தற்போது அதிரடி வான்வழி பதில் தாக்குதலை நடத்தியுள்ளது.