பதற்றத்தை தவி‌ர்‌க்க இந்தியா, பாகிஸ்தானுக்கு யு.எஸ் வேண்டுகோள்

சனி, 27 டிசம்பர் 2008 (17:25 IST)
இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து படைகளை குவித்து வருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் போர் பதற்றம் அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கோர்டோன் ஜான்ட்ரோ, தற்போதைய சூழலில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இரு நாடுகளும் தவிர்க்கும் என நம்புவதாக கூறினார்.

இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்க அரசு தொடர்பில் இருப்பதாகவும், இந்திய எல்லைப் பகுதியை நோக்கி குவிக்கப்படும் பாகிஸ்தான் படைகளின் எண்ணிக்கை குறித்து அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அல்-கய்டா, தாலிபான்கள் ஆதிக்கம் அதிகமுள்ள ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையான வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்ட துருப்புகளையும், இந்திய எல்லைப் பகுதிகளுக்கு பாகிஸ்தான் மாற்றி வருவதால் அமெரிக்காவுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய சூழலில் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றார்.

மேலும், இத்தகைய தருணத்தில்தான் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் உணர வேண்டும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்