இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தை குறைக்க நட்பு நாடுகள் முயற்சி: கிலானி
சனி, 27 டிசம்பர் 2008 (13:13 IST)
உலகில் எந்த நாடும் போர் ஏற்படுவதை விரும்பாது எனக் குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் அப்துல் ரஸா கிலானி, இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பிற்கும் இடையே பொதுவான நட்பு நாடுகள் முயன்று வருவதாக கூறியுள்ளார்.
லாகூரில் நேற்றிரவு நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த கிலானி, பாகிஸ்தான் அமைதியை விரும்புவதால், ராணுவ ரீதியான நடவடிக்கை எதையும் முதலில் மேற்கொள்ளாது என்றார்.
அதேவேளையில், தங்கள் மீது போர் திணிக்கப்பட்டால் நாட்டை பாதுகாக்க அரசும், அரசியல்வாதிகளும், ராணுவமும் தயாராக உள்ளதாக கிலானி தெரிவித்தார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கூட்டு புலனாய்வு நடவடிக்கை மேற்கொள்ள பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்தும், இந்தியா தரப்பில் இருந்து அது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என கிலானி அப்போது குறிப்பிட்டார்.
தற்போதைய பதற்றமான சூழலில் இந்திய அரசு பொறுப்புடன் செயல்படும் எனத் தாம் நம்புவதாக கிலானி தெரிவித்தார்.