முல்லைத்தீவிற்கு அருகில் சர்வதேசக் கடற்பரப்பில் ஆயுதங்களுடன் நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பலைக் காணாததால் சிறிலங்க அரசு அதிர்ச்சியடைந்து உள்ளதாக கொழும்பு வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியப் பகுதிகளாக புதினம் இணைய தளம் தெரிவிப்பதாவது:
விடுதலைப் புலிகளின் முக்கிய ஆயுத முகவரான கே.பி என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் உடல்நலக் குறைவினால் தாய்லாந்தில் இருந்தாலும், புலிகளின் ஆயுதக் கொள்முதல் குழுவின் துணைத் தலைவருடன் தொடர்பில் இருந்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நேரடித் தொடர்பும் அவருக்கு உள்ளது. இளங்கோ என்பவர்தான் இந்த ஆயுதக் கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
கே.பியின் உத்தரவின்பேரில் கடந்த மே மாதம் கனடாவில் இருந்து மூன்று பேர் உக்ரேனிற்கு வந்திருந்தனர். அவர்களை அயல்நாட்டு உளவு அமைப்புக்கள் தீவிரமான பின்தொடர்ந்தன.
மறுநாள் அவர்கள் உக்ரேனைச் சேர்ந்த ஓய்வுபெற்ற படை அதிகாரி ஒருவரை சந்தித்து கொள்முதல் செய்ய வேண்டிய ஆயுதங்கள் பற்றிப் பேசினார்கள்.
இவர்களின் ஆயுத பட்டியலில் 122 மி.மீ, 130 மி.மீ, 152 மி.மீ பீரங்கிகள், மோட்டார்கள், கனரக இயந்திர துப்பாக்கிகளுக்கான வெடிபொருட்கள், சிறிய ஆயுதங்கள் ஆகியவை இருந்தன.
பின்னர் அவர்கள் ஆயுத விநியோக மையத்திற்கு சென்று ஆயுதங்களைப் பார்வையிட்டனர். உக்ரேனிய படை அதிகாரி கொள்முதலிற்கான பரிந்துரைகளை மேற்கொண்டார். அதன் பின்னர் விடுதலைப் புலிகள் இரண்டு தவணைகளில் பணத்தை செலுத்தியிருந்தனர்.
கொள்முதல் உறுதியானதும், அதனை கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை அவர்கள் ஆராய்ந்தனர்.
இந்த தகவலை படையினரின் உயர்மட்ட புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
முதலில் விடுதலைப் புலிகள் விமானம் ஒன்றை வாடகைக்கு எடுக்கவே முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அது முடியாததால் அவர்கள் கப்பல் ஒன்றை வாடகைக்கு பெற்று கொண்டனர். அல்லது அது அவர்களின் சொந்த கப்பலாகக் கூட இருக்கலாம்.
உக்ரேனில் உள்ள ஆயுத விநியோக மையத்திற்கு செல்ல ஏற்றது போல கப்பல் மறுசீரமைக்கப்பட்டு, ஆயுதங்கள் ஏற்றப்பட்டு அது சிறிலங்கா நோக்கி புறப்பட்டது.
சிறிலங்கா நோக்கிய பயணத்தின் போது கப்பல் பல தடவை கொடிகளையும், பெயரையும் மாற்றி கொண்டது.
கப்பல் முல்லைத்தீவுக்கு அருகில் சர்வதேசக் கடற்பரப்பை அடைந்து நங்கூரம் பாய்ச்சி நின்றதும் அதில் இருந்த பொருட்கள் 40 மீட்டர் நீளமுள்ள மிதவைகளில் இறக்கப்பட்டன. இதுகுறித்து அயல்நாட்டு உளவு நிறுவனம் ஒன்று சிறிலங்காவுக்கு தகவல்களை வழங்கியிருந்தது.
அதன் பின்னர், சிறிலங்க கடற்படையினரும், விமானப் படையினரும் மேற்கொண்ட இணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது மிதவை கண்டறியப்பட்டது.
இருந்தாலும், கடற்படை புலனாய்வுத்துறையின் பலவீனம் காரணமாக விடுதலைப் புலிகளின் கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை.