கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை போராடுவோம்: சர்தாரி!
வியாழன், 25 டிசம்பர் 2008 (11:17 IST)
பாகிஸ்தானின் இறையாண்மை மீது ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது என்று கூறியுள்ள அந்நாட்டு அதிபர் ஆஷிப் அலி சர்தாரி, நாட்டைப் பாதுகாப்பதற்காக கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம் என்றார்.
சிந்து மாகாணத்தில் உள்ள பெட்டாரோ இராணுவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "எங்களின் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை எங்கள் நாட்டைப் பாதுகாக்கப் போராடுவோம்" என்றார்.
மேலும், "நமது நாடு சவால்கள் நிறைந்த காலகட்டத்தைக் கடந்து வருகிறது. சவால்களை மக்கள் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். நமது நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். பாகிஸ்தானின் ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரம் ஆகியவற்றுடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள முடியாது." என்றும் சர்தாரி கூறினார்.
இதற்கிடையில், இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் தகவல் அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான், "பாகிஸ்தான் அரசு இயன்றவரை கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறது. மண்டல ஒத்துழைப்பு, அமைதி ஆகிய பாதைகளில் இருந்து தவறாமல் எமது மக்கள் நடந்து வருகின்றனர்.
அதேநேரத்தில், பாகிஸ்தானின் ராஜ்ய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் திறன் அரசிற்கு உள்ளதா என்று யாரும் சந்தேகப்பட வேண்டாம். பாகிஸ்தானின் கட்டுப்பாடான நடவடிக்கையை கோழைத்தனம் என்றும் யாரும் கருத வேண்டாம். தேவைப்பட்டால் உரிய பதிலடி கொடுக்கவும் தயார்" என்றார்.