மும்பை தாக்குதலில் ஆதாரம் அளித்தால் நடவடிக்கை: நவாஸ் ஷெரீஃப் ‘பல்டி’

புதன், 24 டிசம்பர் 2008 (18:25 IST)
மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் இந்தியா ஆதாரம் அளிக்க வேண்டும். அப்படி அளிக்கவில்லை என்றால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் போலி குற்றச்சா‌ற்றுகள் கூறுவதை இந்தியா தவிர்க்க வேண்டும் என நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய அஜ்மல் அமீர் கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவரே என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த வாரம் கூறியிருந்த நிலையில், தற்போது இந்தியாவிடம் அவர் ஆதாரம் கேட்டுள்ளார்.

பாகிஸ்தான் அரசு மும்பை தாக்குதலில் ஈடுபடவில்லை. அப்படி ஈடுபட்டதற்கு ஆதாரம் இருந்தால் அதனை பாகிஸ்தானிடம் வழங்குங்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியாவுக்கு வலியுறுத்தியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு லாகூரில் உள்ள முதல்வர் செயலகத்தில் நேற்று நடந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஷெ‌‌ரீஃ‌ப், இந்தியா ஆதாரம் வழங்கினால் அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிபர் சர்தாரியிடம் நேரில் சென்று வலியுறுத்த தாம் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

அப்படிப்பட்ட ஆதாரங்கள் ஏதும் இல்லையென்றால், போலியான குற்றச்சா‌ற்றுகளைக் கூறி இரு நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

கடந்த வெள்ளியன்று ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு ஷெ‌‌ரீஃ‌ப் அளித்த பேட்டியில், அஜ்மல் அமீர் கஸாப் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பரிட்கோட் கிராமத்தைச் சேர்ந்தவர்தான். அவரது வீட்டிற்கு யாரும் செல்ல முடியாதபடி பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்