மும்பை தாக்குதலிற்கு பாகிஸ்தானை ‘பலிகடா’ ஆக்க இந்தியா முயற்சிக்கிறது: கிலானி

புதன், 24 டிசம்பர் 2008 (17:32 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் தங்கள் நாட்டின் உளவு அமைப்புகள் சந்தித்த தோல்வியை மறைப்பதற்காக பாகிஸ்தானை பலிகடாவாக்க இந்தியா முயற்சிக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறியுள்ளார்.

லாகூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிலானி, தன்னுடைய மதிப்பீட்டின்படி, இரு நாடுகளிடையே பதற்றம் காணப்பட்டாலும், அது போராக மாறாது.

பாகிஸ்தான் பொறுப்பான தேசம் என்பதால் தற்போது நிலவு வரும் சூழலை அரசும், ராணுவமும் தீவிரமாக கவனித்து வருகின்றன. எனவே போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கருதுவதாக தெரிவித்துள்ளார்.

அப்படி ஏதாவது சாகச நடவடிக்கையில் (போர்) இந்தியா ஈடுபட்டால் அதனை எதிர்கொள்ள பாகிஸ்தான் மக்களும், அரசும் தயாராக உள்ளோம் என்றார்.

மும்பை தாக்குதல் புலனாய்வு அமைப்புகளின் தோல்வி என்பதால், இந்திய அரசின் மீது இந்திய மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே ஏதாவது ஒரு விடயத்தை அதற்கு பலிகடா ஆக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அரசு உள்ளது என கிலானி கூறினார்.

அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவு கொள்ளவே விரும்புகிறோம். யாருடனும் போருக்குச் செல்ல விரும்பவில்லை எனக் கூறிய கிலானி, சர்வதேச அளவில் பாகிஸ்தான் மீது குற்றம்சாற்றுபவர்கள் அதற்கான ஆதாரங்களை வைத்துக் கொண்டு கருத்தை தெரிவிக்க வேண்டும்.

அதுதொடர்பான ஆதாரங்களை சம்பந்தப்பட்ட நாட்டிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தவறான யூகங்களுக்கு செல்லாமல் இருக்க முடியும் என்று கிலானி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்