தமிழக இளைஞர் ஆஃப்கானிஸ்தானில் கடத்தல்!
புதன், 24 டிசம்பர் 2008 (17:06 IST)
ஆஃப்கானிஸ்தானில் இத்தாலியப் படையினரின் உணவுக் கிடங்கில் வேலை செய்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த இளைஞரை தீவிரவாதிகள் கடத்தினர் என்று காவலர்கள் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிமோன் என்ற 38 வயதுடைய இளைஞர், ஆஃப்கானிஸ்தானில் முஜாஹிதீன் எனப்படும் தீவிரவாதக் குழுவினரால் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்டார் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பக்ராம் என்ற இடத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் உள்ள சர்வதேசப் பாதுகாப்பு உதவிப்படை முகாமில் உணவு வினியோகத்தில் ஈடுபட்டு இருந்தபோது சிமோனும், அவருடன் பணியாற்றிய மேலும் இரண்டு ஊழியர்களையும் தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர்.
சிமோனை காபூலில் பணியாற்றும் அவரது சகோதரர் சுப்புவுடன் பேசுவதற்கு கடத்தல்காரர்கள் அனுமதித்துள்ளனர். பின்னர் சிமோனை விடுவிப்பதற்கு 50,000 அமெரிக்க டாலர் பிணையத் தொகையாக வேண்டும் என்று சுப்புவிடம் கடத்தல்காரர்கள் கேட்டுள்ளனர்.
சிமோனை விடுவிப்பதற்குத் தேவையான ராஜ்யரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தமிழகத்தைச் சேர்ந்த சூர்ய நாராயணன் என்ற பொறியாளரைக் கடத்திய தாலிபான் தீவிரவாதிகள், அவரைத் தலையை அறுத்துக் கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.