பதிலடி தரும் வல்லமை படைத்தது பாகிஸ்தான் ராணுவம்: சர்தாரி
புதன், 24 டிசம்பர் 2008 (15:17 IST)
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் ராணுவம் எதற்கும் தயார் நிலையில் உள்ளதாகவும், இந்தியா தாக்கினால் அதற்கு தகுந்த பதிலடி தரும் வல்லமையை தனது ராணுவம் பெற்றுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் முப்படை இணைத்தளபதிகள் கமிட்டியின் தலைவர் ஜெனரல் தாரிக் மஜீத், அதிபர் சர்தாரியை இஸ்லாமாபாத்தில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, பாகிஸ்தான் ராணுவம் எந்தவிதத் தாக்குதலையும் சந்திக்கத் தயாராக உள்ளதாக அதிபர் சர்தாரியிடம் தெரிவித்ததாக டான் நியூஸ் தொலைக்காட்சி கூறியுள்ளது.
அப்போது பேசிய சர்தாரி, நாட்டின் கிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்படும் எந்தவித நடவடிக்கைகளையும் சமாளிக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளதாகவும், தங்களின் ராணுவ பலத்தை இந்தியா குறைவாகக் கருதக் கூடாது என்றும் தெரிவித்ததாக அந்த தொலைக்காட்சி குறிப்பிடுகிறது.
இதற்கிடையில், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவுவதை யாரும் விரும்பவில்லை. இதுதொடர்பான நடவடிக்கைகளை மிகுந்த கவனத்துடன் கையாள்கிறோம் என்றார்.
தற்போது எல்லையில் நிலவும் சூழலை தமது அரசு நன்கு அறிந்துள்ளதாகவும், அடுத்தடுத்த செயல்படுகளுக்குத் தகுந்தார்போல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்த கிலானி, பாகிஸ்தான் ராணுவம் மிகவும் சாதகமான நிலையில் உள்ளதாகவும் கூறினார்.