இந்தியாவால் கைது செய்யப்பட்டவர் ராணுவ வீரர் இல்லை: பாகிஸ்தான்
புதன், 24 டிசம்பர் 2008 (12:23 IST)
ஜம்மு-காஷ்மீரில் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ வீரரைக் கைது செய்துள்ளதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இதுகுறித்து யு.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவால் கைது செய்யப்பட்ட குலாம் ஃபரித் என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்தவர் எனக் கூறுவதில் உண்மையில்லை.
பஞ்சாப் மாகாணத்தின் ஓக்ரா ராணுவ தளத்தில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே குலாம் ஃபரித் விலகி விட்டார். அவர் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தைத் சேர்ந்தவர் அல்ல.
தற்கொலைத் தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவிய சிலரை நேற்று கைது செய்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்த அம்மாநில காவல்துறை தலைவர் குல்தீப் குதா, அவர்களில் ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த குலாம் ஃபரித் எனத் தெரிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் இன்று அதனை மறுத்துள்ளது.