மும்பை தாக்குதல் விசாரணை: பாக். நடவடிக்கை திருப்தியளிக்கிறது- இண்டர்போல்
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (17:40 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவுக்கு உதவும் வகையில் பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் விதத்தில் இருப்பதாக சர்வதேச காவல்படை (இண்டர்போல்) தெரிவித்துள்ளது.
இண்டர்போல் அமைப்பின் பொதுச் செயலர் ரோனால்ட் நோபெல் தலைமையிலான குழு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கை இஸ்லாமாபாத்தில் சந்தித்துப் பேசியது.
அப்போது மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதற்கான உறுதியான ஆதாரங்களை இந்தியா வழங்கவில்லை என மாலிக் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.நா. பாதுகாப்பு சபை தடைவிதித்துள்ள லஷ்கர்-ஈ-தயீபாவின் துணை அமைப்பான ஜமாத்-உத்-தவாவை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மாலிக் தெரிவித்தார்.
மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கு தேவையான எந்தவொரு உதவியையும் செய்துதர பாகிஸ்தான் தயாராக உள்ளதாகவும், ஆனால், இதுவரை இந்தியா எந்த உறுதியான ஆதாரங்களையும் அளிக்கவில்லை என்றும் பாகிஸ்தான் தரப்பில் இண்டர்போலிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலிக் உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நோபெல், மும்பை தாக்குதல் தொடர்பாக எந்த ஆதாரத்தையும் இண்டர்போலிடம் இந்தியா பகிர்ந்து கொள்ளவில்லை என்றும், அதுதொடர்பான எந்தத் தகவல்களையும் இண்டர்போல் தகவல் தொகுப்பில் பதிவேற்றம் செய்ய தனது காவல் துறைக்கு இந்தியா அனுமதியளிக்கவில்லை என்றும் கூறினார்.
பின்னர் பேசிய மாலிக், மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அல்லது அதிகாரப்பூர்வமற்ற முறையில் இதுவரை தகவல் அளிக்கப்படவில்லை என்றார்.