மும்பையில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதி அஜ்மல் எழுதிய கடிதத்தை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா ஒப்படைத்துள்ள நிலையில், அந்த கடிதம் உறுதியான் ஆதாரமாகாது என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
கைதாகி காவல்துறையினரின் விசாரணையில் உள்ள அஜ்மல் அமீர், தன்னைக் காப்பாற்றுவதற்கு உதவுமாறு கோரி பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை மத்திய வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தான் தூதரை அழைத்து புதுடெல்லியில் நேற்று ஒப்படைத்தது.
இந்த தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய பயங்க்ரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதாக இந்தியா கூறிவரும் குற்றச்சாட்டை நிராகரித்து வரும் பாகிஸ்தான் அரசு, அஜ்மலின் கடிதத்தையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.
அஜ்மலின் கடிதம் மட்டுமே உறுதியான ஆதாரமாக முடியாது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் குறிப்பிட்டதாக டான் நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.
சர்வதேச மற்றும் பாகிஸ்தான் உள்நாட்டு ஊடகங்களும் அஜ்மலின் குடியுரிமை குறித்து உறுதிப்படுத்திய நிலையிலும், மும்பை காவல்துறையினரிடம் அஜ்மலை ஒப்புக்கொண்ட போதிலும், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கும் தங்கள் நாட்டிற்கும் தொடர்பு இல்லை என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது.
இதற்கிடையே உதவி கோரி அஜ்மல் எழுதிய கடிதத்திற்கும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் மறுப்பு வெளியிட்டுள்ளது. அஜ்மலின் அடையாளம் குறித்து வேறு உறுதியான ஆதாரங்களை இந்தியா அளிக்க வேண்டியது அவசியம் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஃபரித்கோட் கிராமத்தைச் சேர்ந்தவ அஜ்மல். கடந்த மாதம் 26ஆம் தேதி மும்பையில் தாஜ் உள்ளிட்ட நட்சத்திர விடுதிகளில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்களில் ஈடுபட்ட போது, பாதுகாப்புப் படையினர் அஜ்மலைக் கைது செய்தனர்.
தாமும், மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்க்ரவாதிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று அஜ்மல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை தாம் சந்திக்க விரும்புவதாகவும் அஜ்மல் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
ஊடகங்களில் தனது மகனின் படத்தைப் பார்த்த அஜ்மலின் தந்தை கஸாப்பும் அஜ்மலின் பூர்வீகம் குறித்து உறுதிப்படுத்திய போதிலும், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.