பாக்.கில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஒழிக்க ஒபாமா அரசு வலியுறுத்தும்
திங்கள், 22 டிசம்பர் 2008 (18:27 IST)
அமெரிக்காவில் அடுத்தாண்டு பதவியேற்க உள்ள பராக் ஒபாமா அரசு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புள்ள அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க உறுதிபட வலியுறுத்தும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஃப்ரான்க் பல்லோனி ஜுனியர் தெரிவித்துள்ளார்.
இந்திய சமுதாயத்தினர் சார்பில் நியூஜெர்ஸியின் எடிசன் நகரில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், மும்பை பயங்கரவாத தாக்குதல் போன்றதொரு தாக்குதலை இந்தியா எதிர்காலத்தில் சந்திக்காமல் இருக்கத் தேவையான உதவிகளை ஒபாமா அரசு மேற்கொள்ளும் என்றார்.
இதன்படி உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, அதிநவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் ஒபாமா அரசு செய்யும் எனக் கூறினார்.
தற்போதைய சூழலில் இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர்ந்து வழிநடத்திச் செல்ல அல்லது மும்பை தாக்குதலுக்கு பின்னர் இருநாட்டிற்கிடையே ஏற்பட்டுள்ள சூழலை தணிக்க பாகிஸ்தான் தலைமையில் ஒருவரும் இல்லை என்று பல்லோனி தெரிவித்தார்.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றி, இந்தியாவிற்கு எரிசக்தி தன்னிறைவை அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் அமெரிக்காவின் புதிய அரசு எடுக்கும் என்றார்.