ஜமாத்-உத்-தவாவுக்கு பயங்கரவாத தொடர்பு உண்டு: ரைஸ்

புதன், 17 டிசம்பர் 2008 (16:20 IST)
ஜமாத்-உத்-தவா அமைப்பு மேற்கொண்டு வரும் அறக்கட்டளைப் பணிகள் முடக்கப்படாது எனப் பாகிஸ்தான் கூறியுள்ள நிலையில், அந்த அமைப்பிற்கு பயங்கரவாத தொடர்பு உள்ளது எ‌ன்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீஸா ரைஸ் உறுதிபடக் கூறியுள்ளார்.

நேற்று நடந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், ஜமாத் அமைப்பிற்கு ஐ.நா விதித்துள்ள தடையை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாடுகளிடம் அமெரிக்கா வலியுறுத்தும் என்றார்.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் இவ்விடயத்தில் (ஜமாத் மீதான தடைக்கு) பூரண ஒத்துழைப்பு அளிக்கும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் ரைஸ் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் தற்போது உள்ள ஜனநாயக அரசு, சர்வதேச நாடுகளுடன் நியாயமான முறையில் நடந்து கொள்ளவும், அதன் மூலம் சர்வதேச அரசியலில் மரியாதையைப் பெறவும் விரும்புகிறது. அதே தருணத்தில் பயங்கரவாதப் பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு ரைஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜமாத்-உத்-தவா அமைப்பின் அறக்கட்டளைப் பிரிவின் நடவடிக்கைக‌ள் முடக்கப்படாது என பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரோஷி தெரிவித்திருந்த நிலையில், அந்த அமைப்பிற்கு பயங்கரவாதத் தொடர்புகள் உள்ளது என ரைஸ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்