கிளிநொச்சியில் கடும் போர்: 130 இராணுவத்தினர் பலி!

புதன், 17 டிசம்பர் 2008 (15:46 IST)
இலங்கையில் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சி நகரைக் கைப்பற்ற சிறிலங்க இராணுவம் முன்னேறியதையடுத்த நடந்த கடும் போரில் 130 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
TNetTNET

கிளிநொச்சி நகரைச் சுற்றியுள்ள மலையாளபுரம், குஞ்சுப்பரந்தன், முறிகண்டி, புலிக்குளம் ஆகிய பல்வேறு முனைகளில் இருந்து சிறிலங்க இராணுவம் முன்னேறியதை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டதாகவும், செவ்வாய்க் கிழமை மாலை வரை நீடித்த இந்தச் சண்டையில் 130 சிறிலங்க படையினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 300 பேர் வரை காயமுற்றதாகவும் கூறியுள்ள விடுதலைப் புலிகளின் பேச்சாளர் புலித்தேவன், சிறிலங்க இராணுவத்தினரி்ன் 24 சடலங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மலையாளபுரம், குஞ்சிப்பரந்தனில் இன்னமும் கடும் சண்டை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ள புலிகள், கிளிநொச்சியைக் கைப்பற்ற இலங்கை இராணுவம் மேற்கொண்ட மூன்றாவது முயற்சியை முறியடித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

இத்தகவல்களை புலிகள் ஆதரவு இணையத்தளமான தமிழ்நெட்.காம் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை அடுத்த கிளாலியில் நேற்று காலை நடந்த மோதலில் 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அங்கு விடுதலைப் புலிகள், சிறிலங்க இராணுவம் ஆகியவற்றின் முன்னனி பாதுகாப்பு அரண்களுக்கு இடையே சிறிலங்க இராணவத்தினரில் பல சடலங்கள் சிதறிக் கிடப்பதாகத் தெரிவித்ததுள்ளனர்.

கிளாலி சண்டையில் 120 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், தங்கள் தரப்பில் 27 பேர் பலியானதாகவும் சிறிலங்க இராணுவம் தெரிவித்துள்ளது.