அஜ்மல் உடனான தொடர்புகளை மறைக்க பாக். அதிகாரிகள் முயற்சி
திங்கள், 15 டிசம்பர் 2008 (17:58 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிருடன் பிடிக்கபட்ட அஜ்மல் அமிர் இமான் உடனான தொடர்புகளை மறைக்க பாகிஸ்தான் அதிகாரிகள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதி அஜ்மல் அமிர் இமான் எனது மகன்தான் என பாகிஸ்தானின் ஒக்காரா மாவட்டத்தில் உள்ள அவரது தந்தை அமிர் கஸாப் தெரிவித்ததைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டின் “நியூஸ் டெய்லி” என்ற நாளிதழ் செய்தியில், அஜ்மலின் சொந்த ஊரான பரிட்கோட் கிராமத்திற்கு ஜியோ நியூஸ் தொலைக்காட்சி தொலைக்காட்சி சார்பில் அக்கிராமத்திற்கு சென்ற செய்தியாளர்கள் குழுவை 100க்கும் அதிகமானோர் சூழ்ந்து கொண்டதுடன், கிராமத்தில் உள்ள யாரிடமும் பேட்டி எடுக்கவோ, கிராமத்தை வீடியோ படம் எடுக்கவோ கூடாது என மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தங்கள் கைகளில் லத்தி உள்ளிட்ட சில உபகரணங்களை வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களை முற்றுகையிட்டவர்களில் பலர் அந்நாட்டு பாதுகாப்பு, புலனாய்வு அமைப்புகளின் சார்பில் அக்கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்றும் “நியூஸ் டெய்லி” தெரிவித்துள்ளது.
மும்பை தாக்குதலில் தொடர்புடைய அஜ்மலுக்கும், பரிட்கோட் கிராமத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என உள்ளூர் தலைவரான குலாம் முஸ்தஃபா வட்டோ கூறியுள்ளார். இவ்விடயத்தில் மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஏதாவது செயல்கள் மேற்கொண்டால் அதன் பின்னர் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு செய்தியாளர்களே பொறுப்பு என எச்சரித்ததாகவும் அந்நாளிதழ் செய்தி கூறுகிறது.