பயங்கரவாத அரசு முத்திரையை தவிர்க்கவே நடவடிக்கை: பாகிஸ்தான் அமைச்சர்

வெள்ளி, 12 டிசம்பர் 2008 (18:31 IST)
பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத அரசு என்ற முத்திரை குத்தப்படுவதைத் தவிர்க்கவே, மும்பைத் தாக்குதலிற்குக் காரணமான லஸ்கர் ஈ தயீபாவின் முன்னனி அமைப்பான ஜமாத் உத் தாவா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் செளதிரி அஹமது முக்தார் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஹமது முக்தார், “ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையில் ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது, அதன்படி, தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாகிஸ்தான் பயங்கரவாத அரசு என்று பிரகடணம் செய்யப்பட்டிருக்கும். அதன் மூலம் பாகிஸ்தானின் பொருளாதாரம் முடக்கப்பட்டிருக்கும்” என்று கூறியுள்ளார்.

“உலகம் முழுவதும் ஒரு பக்கத்தில் திரண்டுள்ளது, அதனை எதிர்கொள்ளும் சக்தி பாகிஸ்தானிற்கு இல்லை. நமது எதிரிகளுடன் நாம் சண்டையிடலாம், ஆனால், ஒட்டுமொத்த உலகத்திற்கு எதிராக ஒரு பொருளாதாரப் போரிட நம்மால் முடியாது” என்று கூறிய அமைச்சர் அஹமது முக்தார், லஸ்கர் இயக்கத்தின் முன்னனி அமைப்பான ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பு என்று ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையால் அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டதையடுத்தே பாகிஸ்தான் அரசு அதன் மீது நடவடிக்கை எடுத்தது என்று கூறினார்.

ஐ.நா. தடை செய்ததையடுத்து பாகிஸ்தானும் ஜமாத் உத் தாவா அமைப்பை தடை செய்து அதன் தலைவர் ஹபீஸ் மொஹம்மது சயீது (லஸ்கர் அமைப்பின் தலைவரும் இவர்தான்) கைது செய்யப்பட்டு 3 மாத காலத்திற்கு வீட்டுக் காவலில் வைக்க முடிவு செய்தது. ஜமாத் இயக்கத்தின் பல உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிப்பதாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்