பயங்கரவாதிகள் மீது விரிவான நடவடிக்கை: பாக்.கிற்கு அமெரிக்க நெருக்குதல்!

வெள்ளி, 12 டிசம்பர் 2008 (16:19 IST)
இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்திய லஸ்கர் ஈ தயீபா, ஜெய்ஸ் ஈ மொஹம்மது உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் மீது விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிற்கு அமெரிக்க நெருக்குதல் அளித்துள்ளது.

பாகிஸ்தான் வந்துள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் துணை செயலர் ஜான் நீக்ரோபாண்ட், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் மீது விரிவான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மும்பைத் தாக்குதலால் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தங்களால் தணிக்க இயலும் என்று கூறியுள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்ததென பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பிரதமர் யூசுஃப் ராஸா கிலானி ஆகியோரை சந்தித்த ஜான் நீக்ரோபாண்ட், பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலை அவர்களிடம் அளித்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது.

அப்பட்டியலில் லஸ்கர் ஈ தயீபா, அதன் முன்னனி அமைப்பான ஜமாத் உத் தாவா, ஜெய்ஸ் ஈ மொஹம்மது, அல் ரஷீத் டிரஸ்ட் ஆகியன இடம்பெற்றுள்ளதாகவும், இவற்றிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுகக வேண்டும் என்று பாகிஸ்தான் தலைமையை அமெரிக்கா வற்புறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவைகள் மட்டுமின்றி, பாஸ்பான் ஆலே ஈ ஹதித் போன்ற மிகக் குறைவாகவே அறியப்பட்ட பயங்கரவாத இயக்கங்களும் அப்பட்ட்டியலில் இடம்பெற்றுள்ளதாக பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் தி டான் செய்தி வெளியிட்டுள்ளதென பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.

“மும்பைத் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தானும், இந்தியாவும் இணைந்து செயல்படாவிட்டால் தெற்காசிய மண்டலத்தின் அமைதி பெரிதும் பாதிக்கப்படும” என்றநீக்ரோபாண்ட் கூறியுள்ளார்.

மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே உருவாகியுள்ள போர் பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையே அமெரிக்க இணைந்து பணியாற்றும் என்று நீக்ரோபாண்ட் உறுதியளித்துள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்