அமெரிக்க அயலுறவு துணை அமைச்சர் இந்தியா வருகை

வெள்ளி, 12 டிசம்பர் 2008 (13:59 IST)
அமெரிக்க அயலுறவு துணை அமைச்சரான ஜான் நெக்ரொபோன்டே ஒருநாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அவர் நமது தலைவர்களுடன் விவாதிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கான தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை இந்தியாவுக்கு வந்துள்ள நெக்ரொபோன்டே, நமது அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, மும்பை தாக்குதல் புலனாய்வு தொடர்பாக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது பற்றியும், இதுபோன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பது எப்படி என்பது குறித்தும் விவாதிக்க உள்ளார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கவும் நெக்ரொபோன்டே திட்டமிட்டு உள்ளார்.

நேற்று இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியுடனான சந்திப்பின் போது, மும்பை தாக்குதலில் இந்தியா மேற்கொள்ளும் புலனாய்வுக்கும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் தமது நாடு பூரண ஒத்துழைப்பு அளிக்கும் என பாகிஸ்தான் தரப்பில் நெக்ரொபோன்டேவிடம் உறுதியளிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்