இந்தியா-பாக். இடையே அபாய நிலை: அமெரிக்கா எச்சரிக்கை

வெள்ளி, 12 டிசம்பர் 2008 (13:04 IST)
மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நிலைமை மிகவும் அபாயமானதாக உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மும்பை தாக்குதலைத் தொடர்ந்து எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்திக் கொண்டு பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே நிலைமையை எதிர்கொள்வது கவலையளிக்கக்கூடியது என்று கூறிய ரைஸ், என்றாலும் 2001-02ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்றே மேம்பட்டதாக உள்ளது என்றார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இரு தரப்புக்கும் இடையே போர் ஏற்படுவது போன்ற சூழல் உள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய மக்களுக்கு ஆதரவளிக்கவும், இறையாண்மை செய்தியை தெரிவிக்கவுமே தாம் இந்தியா வந்ததாகவும் ரைஸ் கூறினார்.

மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது என்றும் அவர் கூறினார்.

இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மும்பையில் நடந்த தாக்குதலில் அமெரிக்கர்களும் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ரைஸ், பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்ற தருணம் இது என்றார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலைமை மோசம் அடைவது, ஆசியப் பகுதிக்கு உகந்ததல்ல; அதனைக் கருத்திக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கட்டும் என்று தாம் இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டதாகவும் காண்டலிசா ரைஸ் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்