சந்தேகத்திற்கிடமான பயங்கரவாதி மலேசியாவில் விடுதலை
புதன், 10 டிசம்பர் 2008 (16:48 IST)
உலகை உலுக்கிய அமெரிக்க 9/11 இரட்டை கோபுரத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவி புரிந்ததாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த யாஸித் ஸுஃபாத் என்ற முன்னாள் ராணுவ கேப்டனை மலேசியா விடுதலை செய்துள்ளது.
அவருடன் மேலும் 6 பேரையும் மலேசியா விடுதலை செய்துள்ளது. 9/11 தாக்குதலில் விமானம் கடத்தியவர்களுக்கு உதவியதாக சந்தேகிக்கப்பட்ட இவரும் மற்ற ஆறு பேரும் விசாரணையின்றி கடந்த 7 ஆண்டுகளாக மலேசிய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.
தெற்காசிய பயங்கரவாத அமைப்பான ஜெமா இஸ்லாமியாவை சேர்ந்ததாகக் கூறப்படும் 3 பேர், தாய்லாந்து பிரிவினைவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் இருவர், அயல் நாட்டு உளவு நிறுவனங்களை வேவு பார்த்ததாக கருதப்பட்ட இரண்டு மலேசியர்கள் ஆகியோரை கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி மற்றும் டிசம்பர் 4ஆம் தேதி ஆகிய நாட்களுக்கு இடையில் விடுதலை செய்துள்ளதாக மலேசியா தெரிவித்துள்ளது.
அவர்கள் ஒரு பெரிய அச்சுறுத்தல் இல்லை என்பதால் தற்போது விடுதலை செய்துள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
மலேசிய அரசின் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுபவர்களுக்கு தீவிர மறுவாழ்வு ஆலோசனைகளும், மன மாற்றப் பயிற்சியும் அளிக்கப்படும், இவர்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் திருப்தி அடைந்தால் தவிர அவர்களை வெளியில் விடமாட்டோம் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
அமெரிக்காவில் உயிர் வேதியியல் பயிற்சி பெற்ற யாஸித் ஸுஃபாத் 2001 ஆம் ஆண்டு ஆப்கானிலிருந்து திரும்பும்போது கைது செய்யப்பட்டார். ஆப்கானில் இவர் அல் கய்டாவின் உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்கள் திட்டத்திற்கு உதவி புரிந்ததாக சந்தேகம் எழுந்தது.
மலேசியாவின் வடக்குப் பகுதி சிறைகளில் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் உட்பட மேலும் 46 பேர் விசாரணையின்றி தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களையும் விடுவிக்கக் கோரி மனித உரிமைக் குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.