மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம்: பாக்.!
செவ்வாய், 9 டிசம்பர் 2008 (18:10 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல்களில் தனது குடிமக்கள் யாருக்கேனும் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம், ஆனால் உள்நாட்டுச் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படும் என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
முல்டான் நகரத்தில் பக்ரீத் தொழுகையை முடித்துவிட்டு வந்த பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, "எங்களின் தனிப்பட்ட விசாரணைக்காகத்தான் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கைதாகியுள்ளவர்கள் யாராவது குற்றவாளிகள் என்று நிரூபணமானாலும் கூட, அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம்." என்றார்.
மேலும், "குற்றவாளிகள் மீது நமது நாட்டுச் (பாகிஸ்தான்) சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படும். தேவைப்பட்டால் இதுதொடர்பாக நான் புது டெல்லிக்கு நேரில் சென்று பாகிஸ்தானின் நிலையை இந்தியாவிடம் தெளிவாக விளக்குவேன்" என்றும் குரேஷி கூறினார்.
லஸ்கர் ஈ தயீபா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், "எதிர்பார்க்கும் முடிவுகள்" கிடைக்கும் வரை தொடரும் என்று பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் குரேஷி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.