பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் தலைநகரான முசாஃபராபாத்தில் உள்ள லஸ்கர் ஈ தயீபா இயக்கத்தின் முகாம் ஒன்றில் பாகிஸ்தான் இராணுவம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை சதித் திட்டம் தீட்டி நிறைவேற்றியதன் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் லஸ்கர் ஈ தயீபா பயங்கரவாதி ஜாக்கீர் ரெஹ்மான் லாக்வி உட்பட அந்த இயக்கத்தைச் சேர்ந்த 20 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் மக்கள் தொடர்புத்துறை தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் அதர் அப்பாஸ் கூறுகையில், "லஸ்கர் ஈ தயீபா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு காலக்கெடு எதுவும் கிடையாது. எதிர்பார்க்கும் முடிவுகளை எட்டும்வரை நாடு முழுவதும் இது தொடரும்" என்றார்.
ஜாக்கீர் ரெஹ்மான் லாக்வி கைது செய்யப்பட்டது பற்றிக் கேட்டதற்கு, "லஸ்கர் ஈ தயீபா இயக்கத்தின் முக்கியத் தலைவர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளது உண்மைதான் மேலும் பல கைது நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்" என்றார் அவர்.