பெஷாவரில் கார் குண்டு தாக்குதல்: 20 பேர் பலி

சனி, 6 டிசம்பர் 2008 (11:14 IST)
பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெஷாவரில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெஷாவரின் குசா ரிசால்டர் பகுதியில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டு தலத்திற்கு அருகே நேற்று மாலை நடந்த இத்தாக்குதலில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

பக்ரித் பண்டிகையை முன்னிட்டு ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த சந்தையில் ஏராளமானோர் கூடியிருந்த போது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாகவும், இத்தாக்குதலுக்கு 25-30 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பு காரணமாக சந்தையில் இருந்த கடைகளிலும் தீ விபத்து ஏற்பட்டது. பலியானவர்களில் 4 பெண்களும் அடங்குவர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்